உடல் நலக்குறைவால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 74.
கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வால்பாறை சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் கோவை தங்கம். இவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் துணைத் தலைவராக இருந்தார். 2011-ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். 2021ல் வால்பாறை தொகுதியை அதிமுக கூட்டணியில் இருந்த தமாகாவுக்கு ஒதுக்கப்படாததால் அக்கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாக களம் இறங்குவதாக அறிவித்தார்.
பின்னர் தன் முடிவை மாற்றி திமுகவில் இணைந்தார். அதன்பிறகு, வால்பாறை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படவே, 2011ல் எந்த வேட்பாளரிடம் (ஆறுமுகம்) தோற்றாரோ அதே வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவை தங்கம், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருடைய உடல் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
கோவை தங்கம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வால்பாறை சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் கோவை தங்கம் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மாற்றுக் கட்சியில் இருந்தபோதும், திமுகவில் இணைந்த பின்பும் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் கோவை தங்கம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.