வெளிநாட்டு வேலை மோசடி.. புகார் தெரிவிக்க மின்னஞ்சல், உதவி எண் அறிவிப்பு..!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்தும், சந்தேகத்துக்குரிய முகவர்கள் குறித்தும் புகார் தெரிவிக்க தமிழக காவல்துறையில் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “திருச்சியைச் சோ்ந்த ‘கேர் கன்சல்டன்சி’ என்ற நிறுவனம் தாய்லாந்து நாட்டில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைக்கு ஆள்கள் தேவைப்படுவதாக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த நிறுவன முகவர்களை தொடர்பு கொண்டு வேலை கேட்ட 18 பேரிடம், தலா 1.50 லட்சம் முதல் 2.50 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர்.

பின்னர் அந்த 18 பேரையும் சுற்றுலா விசாவில் துபாய் வழியாக பாங்காக் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து சட்டவிரோதமாக மியான்மர் நாட்டுக்கு 18 பேரையும் கடத்திச் சென்று, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவா்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால், மியான்மர் நாட்டில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, கேர் கன்சல்டன்சி நிறுவனத்தைச் சேர்ந்த முகவர்கள் ஹானவாஸ், முபாரக் அலி ஆகிய இருவர் கடந்த 11-ம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல, மற்றொரு கும்பல் கம்போடியா நாட்டுக்கு சிலரை வேலைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுத்தியுள்ளது. அவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தமிழக இளைஞா்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த மோசடி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை தருகிறோம் என்று அழைத்தால் அந்த நிறுவனத்தின் உண்மைத் தன்மை அறியாமல் யாரும் வெளிநாடு செல்ல வேண்டாம். மேலும், சுற்றுலா பயண விசாவில் 6 மாதம் வேலை செய்ய வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம்.

இதுபோன்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்தும், சந்தேகத்துக்குரிய முகவர்கள் குறித்தும் தமிழக காவல்துறையில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில் புகார் அளிக்கலாம். இப் பிரிவை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும், 044-28447701 என்ற தொலைபேசி எண் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.