விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போனதாக சரித்திரம் இல்லை

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார். அவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்தவராகவும் விளங்கியவர். ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வு வளம்பெற போராடியவர். தமிழக மக்களின் மனதில் என்றைக்கும் வாழ்ந்து கொண்டு இருப்பவர். அவர் பிறந்த நாளான அக்டோபர் 30ம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அவ்வாறு நடைபெறுகின்ற தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு, தேவர் திருமகனாருக்கு மலர் அஞ்சலி செலுத்துவதற்காக, புரட்சித்தலைவி அம்மாவும், நானும் கடந்த 30.10.2010 அன்று ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திற்கு சென்று இருந்தோம். அச்சமயம் எங்களிடம் தேவர் திருமகனாரின் திருவுருவச்சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று அங்கே குழுமியிருந்த மக்களும், கோவை காமாட்சிபுரி ஆதினம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகளும் வேண்டுகோள் வைத்தனர். அதனைத்தொடர்ந்து தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை கழகத்தின் சார்பாக செய்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 09.02.2014-ந் தேதி வழங்கினார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவை சிறப்புடன் கொண்டாடுகிற வகையில் அய்யா முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்படுகிறது.

தேவர் திருமகனாருக்கு வழங்கிய தங்கக்கவசத்தை, பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் உள்ள வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்து தேவர் ஜெயந்தி விழாவின் போது எடுத்து அணிவிக்கப்படுகிறது. இது ஒரு வழக்கமான நடைமுறை தான், இது புரட்சிதலைவி அம்மா அவர்களால் வழங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்துகொண்டு இருக்கிறது. இதில் என்றைக்கும், எந்தவித இடையூறுகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கிய பொறுப்பு நம் கட்சியினருக்கு தான் இருக்கிறது. “விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போனதாக சரித்திரம் இல்லை” என்பதை கழகத்தினர் அனைவரும் மனதில் வைத்து, தொடர்ந்து மேற்கொண்டுவரும் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி, சமூக நீதிக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த தேவர் திருமகனாருக்கு தங்கக்கவசம் அணிவித்து, எதிர்வரும் தேவர் ஜெயந்தி விழாவினை அனைவரும் சிறப்புடன் கொண்டாட வேண்டும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.