
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தரமானதாகவும், விலையேற்றமின்றி மலிவாக கிடைக்கவும் புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், புதுவை அரசின் கூட்டுறவு நுகர்வோர் இணையம் (கான்பெட்) மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மக்கள் மளிகை சிறப்பங்காடி நடத்தப்படுகிறது.
புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள கான்பெட் வளாகம், வில்லியனூர் கோபாலசாமி நாயக்கர் திருமண நிலையம், அரியாங்குப்பம் பாண்டுரங்கா திருமண நிலையம், திருக்கனூர் விஜய் திருமண மகால், பாகூர் விவசாய சேவை கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் இந்த மக்கள் மளிகை சிறப்பங்காடி நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பங்காடியின் தொடக்கவிழா தட்டாஞ்சாவடி கான்பெட் வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு மக்கள் மளிகை சிறப்பங்காடியை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த சிறப்பங்காடி தீபாவளிக்கு முந்தைய நாளான 23-ம் தேதி வரை தினமும் காலை 10 மணிமுதல் இரவு 9 மணிவரை செயல்படும்.
இந்த சிறப்பங்காடியில் சர்க்கரை, துவரம் பருப்பு, கல் உப்பு தலா ஒரு கிலோ, வெள்ளை உளுந்து, கடலைபருப்பு, தனியா, ரவை, மைதா, கோதுமை, வெல்லம் தலா 500 கிராம், சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் என 30 வகையான பொருட்கள் ரூ.1,000 விலையில் கிடைக்கிறது. இவற்றின் மார்க்கெட் மதிப்பு ரூ.1,343 ஆகும்.