
கேதார்நாத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று மதியம் 12.15 மணியளவில் பயணிகளை ஏற்றிச் சென்றது.

கேதார்நாத்தின் காட் ஷடி என்ற மலைப்பாங்கான பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.

உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய மூவரும் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் என்று உத்தரகண்ட் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.