முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த சசிகலா உட்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சசிகலா, உறவினரான சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்று, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒய்.வி.சி.ரெட்டி, பாபு ஆபிரகாம் ஆகியோர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உரிய விசாரணை நடத்துவதுடன் சட்ட நிபுணர்கள் ஆலோசனை பெற்று 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணைய அறிக்கை தற்போது சுகாதாரத்துறை முதன்மை செயலாளரிடம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த ஆய்வு முடிந்த பிறகு சட்ட வல்லுனர்களுடன் கருத்து கேட்கப்பட்டு ஆலோசனை செய்யப்படும். அதன்பின் சட்ட ரீதியான நடவடிக்கைகள் அல்லது கிரிமினல் நடவடிக்கைகள் தேவைப்பட்டால் மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடைய, தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.