தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கையை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணைய குழு இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களை எச்சரிக்க பயன்படுத்தும் ஒலிபெருக்கி (அ) நன்றாக கேட்கக்கூடிய மெகா போன் மூலமாக எச்சரிக்கை செய்யப்படவில்லை. அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.