சுவீடனில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில், வலது சாரி ஜனநாயக கட்சியின் ஆதரவோடு உல்ஃப் கிறிஸ்டெர்சன் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார். அங்குள்ள மாடரேட் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக கட்சி மற்றும் லிபரெல் கட்சி ஆகியவற்றின் கூட்டணியில் இந்த புதிய அரசு ஆட்சி அமைத்துள்ளது.
இதனை தொடர்ந்து பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் தலைமையில் சுவீடன் அரசின் மந்திரிசபை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. இதில் லிபரெல் கட்சியின் இளைஞர் அணி தலைவரான ரோமினா போர்மக்தாரி (26), அந்நாட்டின் காலநிலை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். இதன் மூலம் சுவீடன் நாட்டின் மிக இளம் வயது அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த ரோமினா போர்மக்தாரி, சிறுவயதில் இருந்தே லிபரெல் கட்சியின் இளைஞர் அமைப்பில் செயல்பட்டு வந்தார். இவர், கடந்த ஆண்டுகளில் உல்ஃப் கிறிஸ்டெர்சனின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சனமும் செய்துள்ளார். பிரபல இளம்வயது சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க்கும் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிரேட்டா, தான் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்றும் அரசியல் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.