சென்னை குரோம்பேட்டை அடுத்த நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (35). இவர், போரூர் டிஎல்எப் பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர், அதே நிறுவனத்தில் உடன் பணிபுரிந்த என்ஜினீயர் மதுமொழி (33) என்ற பெண்ணை கடந்த ஒன்றைரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் வெங்கடேசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்த முதுமொழி, செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் ஊராட்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த அவரது தங்கை வீட்டுக்கு சென்று தங்கினார்.
இந்நிலையில், நேற்று (அக்.17) மாலை வீட்டில் யாரும் இல்லாத போது மதுமொழி அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாழம்பூர் போலீசார் மதுமொழி உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து தாழம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மதுமொழி தற்கொலை செய்துகொண்டதற்கு குடும்ப பிரச்னை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் தாழம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.