திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
வாகனத்தின் உள்ளே காலியாக இருந்தது. இது குறித்து ஓட்டுநரிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். வாகனத்தின் உள்ளே சென்று பார்த்த போது வாகனத்தின் வெளிப்புறம் இருந்த நீளத்திற்கும் உள்புறம் இருந்த நீளத்தின் அளவிற்கும் வித்தியாசம் இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை முழுவதுமாக சோதனையிட்டனர். அதில் வாகனத்தின் உட்புறம் ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தன.
இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கண்டெய்னர் லாரி திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையை சேர்ந்த டைட்டஸ் என்பவருக்கு சொந்தமானதும், ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கியதும், தெரிய வந்தது.
இதையடுத்து 23 லட்சம் மதிப்பிலான 300 கிலோ குட்கா மற்றும் கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்காவை கடத்தி செல்வதற்காகவே கண்டெய்னர் லாரி வாங்கப்பட்டு அதில் ரகசிய அறை அமைத்ததும் தெரிய வந்துள்ளது.
ஓட்டுனர் லோகேஸ்வரனைக் கைது செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் டைட்டஸ் என்பவரை தேடி வருகின்றனர்.
newstm.in