
ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் அறிவுரைகளை மீறி மாணவர்கள் செயல்பட்டால், அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது அவசர காவல் உதவி எண்ணில் தெரிவிக்கவும் என போக்குவரத்துக் கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நடவடிக்கை சென்னை போன்ற நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது. இதனால், அசம்பாவிதங்கள் மட்டுமின்றி பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

இதை தட்டிக்கேட்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மாணவர்களால் தாக்கப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இதைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மாணவர்களின் அட்டகாசம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் அனைத்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘பேருந்ந்தில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்களே பொறுப்பு.

மேலும், மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டாம் என ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அறிவுறுத்த வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் அறிவுரைகளை மீறி மாணவர்கள் செயல்பட்டால், அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது அவசர காவல் உதவி எண் 100-ஐ தொடர்புகொண்டு தெரிவிக்கவும்’ என்று கூறப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் அனுப்பியுள்ள இந்த சுற்றறிக்கை பேருந்து ஒட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.