
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இந்த தடையைப் பற்றித் தெரிவிக்கையில் இந்த தடை பட்டாசு உபயோகத்திற்கு முழுமையாகப் போடப்பட்டுள்ளது என்றார். அதன்படி, பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் வெடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தடை ஜனவரி 1, 2023 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வாங்கி வெடித்தால் ரூ.200 அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.

பட்டாசு தயாரித்தல், வைத்தல், விற்றால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பட்டாசு தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் ஜனவரி 1, 2023 வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.