இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா இஸ்லாமிய மையப் பெரிய மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் குவிமாடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி அளவில் தீ பற்றி எரிந்தது, இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மசூதியின் குவிமாடம் இடிந்து விழுவதற்கு சற்று முன்பு அதிலிருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை கிளம்பியதை வெளியான வீடியோ காட்சிகள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அந்த நேரத்தில் இஸ்லாமிய மையம் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிபத்து அல்லது அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இடிபாடுகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், கட்டிடத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தீயில் எரிந்துகொண்டிருந்த மசூதியின் கோபுரம் சரிந்துவிழும் காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மேலும், இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.