அரசு ஊழியர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்று பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று, பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு ஒன்று அதன் ஊழியர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது.
உங்களது அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. இந்த முடிவுக்கு பஞ்சாப் மாநில அமைச்சரவை முதற்கட்டமாக அனுமதி வழங்கியுள்ளது. நாம் எப்போதும் நமது ஊழியர்கள் பக்கமாக இருப்போம். உறுதியளித்தோம். நிறைவேற்றுகிறோம். நாங்கள் சொல்வதை செய்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம், நாட்டில் பழைய ஓய்வூதிய முறையை மீட்டெடுக்கும் நான்காவது மாநிலமாக பஞ்சாப் உருவாகியுள்ளது.