சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர் வீட்டருகே உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். அதே பேக்கரியில் பணிபுரிந்த அபிநயா என்ற பெண்ணை நடராஜன் காதலித்தார். இருவரின் காதல் விவகாரம் நடராஜனின் வீட்டிற்கு தெரியவந்த நிலையில், பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதனால் நடராஜன் குடும்பத்தினருடன் நெருங்கி பழகிய அபிநயா, அடிக்கடி அவர்களின் வீட்டிற்கும் சென்று, அனைவரிடமும் நெருங்கி பழகி நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதனையடுத்து அபிநயாவின் பெற்றோர் குறித்த விவரங்களை நடராஜனின் பெற்றோர் கேட்டுள்ளனர். தனது சொந்த ஊர் மதுரை என்றும் தான் ஒரு அனாதை என்றும், அவர் கூறியுள்ளார். சென்னையில் பெண்கள் விடுதியில் தங்கி வேலை செய்து வருவதாக கூறினார்.
இதைக்கேட்ட நடராஜன் குடும்பத்தினர் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நடராஜனுக்கும்-அபிநயாவுக்கும் திருமணம் செய்து வைத்தனர். கோவிலில் திருமணத்தை முடித்து, 4 லட்ச ரூபாய் செலவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை விமர்சையாக நடத்தினர்.
நடராஜன் வீட்டில் இருந்த அபிநயா, கடந்த 19ஆம் தேதி காலை திடீரென காணாமல் போய்விட்டார். அபிநயாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில், அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பீரோவை திறந்து பார்த்தபோது 17 சவரன் நகைகள், ரூ.20 ஆயிரம் பணம், திருமணத்திற்காக எடுத்த பட்டுப்புடவைகள் ஆகியவற்றையும் காணவில்லை என்பது தெரியவந்தது. அதன் பின்னரே நகை, பணத்தை திருடிக் கொண்டு அபிநயா திட்டமிட்டு ஓடியது தெரியவந்தது.
கடும் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அபிநயாவின் புகைப்படத்துடன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நகை, பணத்திற்காக திருமண மோசடியில் ஈடுபட்ட அபிநயாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
newstm.in