சிறந்த ரேஷன் ஊழியர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் உணவு தினத்தில் பரிசு வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. அதன்படி, மாநில அளவில் தேர்வு செய்யப்படும் ரேஷன் கடை விற்பனையாளருக்கு முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000, மூன்றாம் பரிசாக 5 000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
எடையாளருக்கு, முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.6,000, மூன்றாம் பரிசாக 4,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில் விற்பனையாளருக்கு முதல் பரிசாக 4,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, எடையாளருக்கு முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக 2,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
சிறந்த ரேஷன் ஊழியர்களை தேர்வு செய்ய கலெக்டர் தலைமையில் ஆறு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து சிறந்த ஊழியர்களை தேர்வு செய்து உணவுத் துறைக்கு பட்டியல் அனுப்பியுள்ளது. அவர்களுக்கு, விரைவில் முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்க உள்ளார்.