ஒடிசா மாநிலம் சம்பால்பூர் மாவட்டத்தில் உள்ள ரவுத்பாரா கிராமத்தில் வசித்து வருபவர் ரஞ்சன் பாடிங். இவரது மனைவி சாவித்திரி (35). ஒரு மாதத்துக்கு முன்பு, மது போதையில் வீட்டுக்கு வந்த அவர், வீட்டுக்கு ஒரு ஆமையை கொண்டுவந்து சமைக்கும்படி மனைவியிடம் கொடுத்திருக்கிறார். மனைவி சாவித்ரி சமைத்து வந்து கணவருக்கு பரிமாறியுள்ளார். அப்போது, உணவை சாப்பிட்ட கணவர் ஆமைக் கறி வறுவல் ஏன் கருகிவிட்டது என ஆத்திரமடைந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதமான நிலையில், போதையில் இருந்த ரஞ்சன் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். மனைவி மயங்கி விழுந்த நிலையில், அப்படியே விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார் ரஞ்சன். பின்னர் போதை தெளிந்து மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது தான் தாக்கியதில் மனைவி உயிரிழந்த விஷயம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இந்த கொலையை யாருக்கும் தெரியாமல் மறைக்க திட்டமிட்ட அவர் மனைவியின் உடலை தூக்கி வீட்டின் பின் புறத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார். பின்னர் உற்றார் உறவினர் ஊர்காரர்களிடம் தனது மனைவி கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாக எல்லோரிடமும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் மருமகனின் மீது சந்தேகம் கொண்ட சாவித்திரியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், ரஞ்சன் வீட்டிற்கு சென்றபோது அவர் ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது, ரஞ்சன் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ரஞ்சன் வீட்டு பின்புறத்தில் இருந்து மனைவியின் உடலை தோண்டி எடுத்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் ரஞ்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அமைக்கறி வறுவல் கருகிப் போனதால் ஆத்திரத்தில் மனைவியை கணவர் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.