
ஒருவர் 100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தால் அவர் அரசியலுக்கு வந்ததாகவே அர்த்தம். அதனால் நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று நடிகர் விஷால் கூறினார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் விஷால், ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பாவில் அமைந்திருக்கும் அமீன் பீர் தர்காவிற்கு சென்று வழிபட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய விஷால், “படப்பிடிப்பிற்காக பலமுறை கடப்பாவிற்கு வந்துள்ளேன். அப்போது எல்லாம் இந்த அமீன் பீர் தர்காவிற்கு வர வேண்டுமென்று நினைப்பேன். படப்பிடிப்பு காரணமாக வரமுடியாத சூழல் ஏற்பட்டது. என்றாலும் இப்போது இந்த தர்காவிற்கு வந்து பிரார்த்தனை செய்திருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை, அல்லாஹ், வெங்கடேஸ்வரா, இயேசு எல்லோரும் ஒன்று தான். மதம் என்ற ரீதியில் பிரிவினை கிடையாது. அனைத்து மத கடவுள்களையும் மதிக்கக் கூடியவன் நான் அதன்படி இங்கும் வந்துள்ளேன்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பயோபிக்கில் நடிக்க இருப்பதாகக் கூறுகிறார்கள். நான் நடிக்கவில்லை. என்னுடைய ‘லத்தி’ படம் டிசம்பரில் வெளியாகும். நான் அரசியலுக்கு வருவது பற்றி கேட்கிறார்கள். ஒருவர் 100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தால் அவர் அரசியலுக்கு வந்ததாகவே அர்த்தம். அதனால் நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். தீவிர அரசியலுக்கு வர இன்னும் காலமாகும்” என்று கூறினார்.