ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசுகளை வெடித்ததால், திரை, இருக்கைகள் தீப்பிடித்து எரிந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கில் நடிகர் பிரபாஸூக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் ‘வெங்கடராமா மல்டிபிளக்ஸ்’ தியேட்டர் ஒன்று உள்ளது. இந்த திரையரங்கில் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு தெலுங்கில் வெளியான ‘பில்லா’ திரையிடப்பட்டது.
தீபாவளி ஸ்பெஷலாக பிரபாஸின் ரசிகர்கள் அதிக அளவில் தியேட்டரில் குவிந்தனர். பல வருடங்கள் ஆனாலும் இந்த படத்திற்கு என்று தனி மவுசு இப்போதும் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தை திரையில் கண்ட பிரபாஸின் ரசிகர்கள், மிகுந்த உற்சாகத்தில் திளைத்தனர்.
அப்போது குஷியான ரசிகர்கள் தியேட்டருக்குள்ளேயே பட்டாசுகளை வெடித்தனர். அப்போது தீப்பொறி தியேட்டரில் உள்ள ஸ்கிரீனில் தீப்பொறி பட்டு அந்த ஸ்கிரீன் மளமளவென எரிந்தது. இதனால் பயந்துபோன ரசிகர்கள் தியேட்டரை விட்டு பதறியடித்துக்கொண்டு ஓடினர்.
பின்னர் தியேட்டர் ஊழியர்கள் வேகமாக செயல்பட்டு உள்ளே இருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற செய்தனர். அதோடு தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தியேட்டர் உரிமையாளர் போலீஸாருக்கு புகார் அளித்தார். இந்த செயலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இது தற்போது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in