தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த ஹேமலதா (24) என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வரும் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய நிலையில், அவர் மீண்டும் முத்துராஜின் காதலை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ், பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண்ணின் தாய் தந்தை முன்பாகவே மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு கழுத்து, முதுகு, கைகளில் தொடர்ந்து கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்துள்ளார்.
இதனிடையே பெண்ணின் அலறல் சத்தம் மற்றும் தாய் தந்தையரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை மடக்கி பிடித்துள்ளனர். இதையடுத்து பெரியகுளம் வடகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை கைது செய்து பெரியகுளம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்த பட்டதாரி பெண்ணுக்கு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணை பெண்ணின் வீட்டிலேயே சென்று கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.