கோவை கார் வெடிப்பு.. 5 பேர் கைது.. திட்டமிட்ட சதியா என விசாரணை..!

கோவையில், காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகரத்தின் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை கார் வெடித்து அதில் இருந்தவர் பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கோவை வந்தார்.

தொடர்ந்து, சம்பவம் நடந்த பகுதிக்குச் சென்று, வெடித்து சிதறிய கார், சேதமான கோட்டை ஈஸ்வரன் கோவிலின் முன்பகுதி, விபத்து நடந்த பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட தடயங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். இந்த சம்பவம் குறித்து துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சிலிண்டர் வெடித்து இறந்த ஜமேஷா முபீன் வீடு இருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, ஜமேசா முபீனுடன் சிலர் இணைந்து ஜமேசா முபீன் வீட்டில் இருந்து சில பொருட்களை எடுத்துச் செல்வது தொடர்பான காட்சிகள் கிடைத்துள்ளன. இது, சனிக்கிழமை (அக்.22-ம் தேதி) இரவு 11.30 மணி அளவில் இது நடந்துள்ளது.

இந்நிலையில், ஜமேஷா முபீன் வீட்டில் வெடிபொருட்கள் கைபற்றபட்டது தொடர்பாக முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் தம்பி நவாப் கானின் மகன் முகமது தல்கா. கார் கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவாப் கான் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டணை கைதியாக சிறையில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள அவர்களிடம், அவர்கள் எடுத்துச் சென்ற பொருள் என்ன?, எதற்காக எடுத்துச் சென்றனர்?, இந்த விபத்து இல்லாமல் வேறு ஏதேனும் திட்டத்துடன் அவர்கள் செயல்பட்டுள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.