மத்தியப் பிரதேசத்தில், என் மனைவியை அடிக்கடி உற்றுப் பார்க்கிறார், பின் தொடர்கிறார் எனக் கூறி, வாலிபர் மற்றும் அவருடைய பெற்றோரை கணவன் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தின் தேவ்ரான் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெகதீஷ் பட்டேல். இவரது வீட்டின் அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் மனக் அஹிர்வார். இந்நிலையில், ஜெகதீஷ் மற்றும் மனக் குடும்பத்தினர் இடையே முன்பகை இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, தனது மனைவியை மனக் அடிக்கடி உற்றுப் பார்க்கிறார் என்றும், பின்தொடர்ந்து சென்று துன்புறுத்துகிறார் என்றும் கூறி ஜெகதீஷ் சண்டை போட்டுள்ளார். அக்கம்பக்கத்தில் வசிக்கும் கிராமவாசிகள் இதில் தலையிட்டு, சண்டையை தடுத்து நிறுத்தி, சமரசப்படுத்தி வைத்தனர்.
ஆத்திரம் தீராமல் நேற்று காலை, ஜெகதீஷ் பட்டேல் மற்றும் 5 பேர் ஆயுதங்களுடன் மனக் அஹிர்வாரின் வீட்டுக்கு சென்றனர். அவர்களிடையே மீண்டும் வாக்குவாதம் நடந்துள்ளது. இந்த முறை மனக், அவரது பெற்றோர் மற்றும் மனக்கின் சகோதரர் மீது ஜெகதீஷ் மற்றும் கூட்டாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றனர்.
இதில், சம்பவ இடத்திலேயே மனக் மற்றும் வயது முதிர்ந்த அவரது பெற்றோர் உயிரிழந்தனர். மனக்கின் சகோதரர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி எஸ்பி தெனிவார் கூறும்போது, பட்டேல் குடும்பத்தினரின் பெண் ஒருவர் துன்புறுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜெகதீஷ் பட்டேலை கைது செய்துள்ளோம். மற்ற 5 பேரை தேடி வருகிறோம் எனத் தெரிவித்தார்.