சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே செம்மண் காட்டுவளவு பகுதியில் வசித்து வந்தவர் கோபி (26). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் 2 வருடமாகவே காதலித்து வந்துள்ளனர். மாணவி அதேபகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், சிறுமியின் வீட்டிற்கு துணிந்து சென்று பெண் கேட்டுள்ளார் கோபி. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத மாணவியின் பெற்றோர், எதிர்ப்பு காட்டினால், ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிடும் என்று பயந்துள்ளனர். அதனால், கோபியிடம் தங்கள் மகளுக்கு இப்போதுதான் 17 வயதாகிறது, 18 வயது முடிந்தவுடன் பெண் கொடுக்கிறோம் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
அதேசமயம், சிறுமியை பெற்றோர் மூன்று மாதங்களாக பள்ளிக்கும் அனுப்பவில்லை. இந்நிலையில், நேற்று சாயங்காலம் 5 மணிக்கு, சிறுமியும், கோபியும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதற்காக 2 பேரும் தென்னை மரத்துக்கு வைக்கும் அலுமினியம் பாஸ்பேட் மாத்திரைகளை சாப்பிட்டு விட்டார்கள். விஷமாத்திரை சாப்பிட்டதுமே இருவரும் அங்கேயே நுரை தள்ளி விழுந்துள்ளனர். இதையடுத்து, சேலம் தனியார் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்த விவகாரம் குறித்து வேறு மாதிரியாக தகவல் வெளியாகி உள்ளது. கோபி பெண் கேட்டு வந்தபோது, சிறுமியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளதாகவும், தங்களது மகள் ப்ளஸ் 2 முடித்துவிட்டு, டிகிரி வாங்க வேண்டும் என்றும் அதனால் காதலை கைவிடும்படி கோபியிடம் கேட்டுக்காண்டார்களாம். அப்படி இருந்தும், இருவரும் தங்களது காதலை தொடர்ந்துள்ளனர். அதுமட்டுமல்ல, இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், 2 வீட்டிலுமே பெற்றோர்கள் தரப்பில் இருந்தும் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இதனால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விடுமோ? தங்களை பிரித்துவிடுவார்களோ என்று பயந்துகொண்டு, இருவரும் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். இதற்காக முன்கூட்டியே, முருகேசனின் விவசாய தோட்டத்தில் விஷ மாத்திரையை தயாராக வாங்கி வைத்துவிட்டார்களாம். அதை சாப்பிட்டதுமே, உடல் முழுவதும் விஷம் பரவி, நீல நிறத்துக்கு மாற துவங்கி உள்ளது. அதற்கு பிறகுதான் ஐசியூவில் சேர்த்தும், காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இது குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதல் ஜோடி தற்கொலை குறித்து தீவிரமாக விசாரணையும் நடந்து வருகிறது.