தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு..!!

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா வருகிற 30-ந் தேதி மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில், தேவர் குரு பூஜை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேவர் குருபூஜை விழாவில் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். போலீஸார் அக்.27 முதல் 30-ம் தேதி வரை பணியில் ஈடுபடுவர். தடை செய்யப்பட்ட பகுதிகள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையின் உத்தரவுகளை மீறி செயல்படுபவர்கள், வாகனங்களை, கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மூலம் ஆய்வு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கபடும். பசும்பொன்னில் கண்காணிப்பு பணியில் 13 ட்ரோன் கேமராக்கள், 92 நிரந்தரக் கேமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளது” என்றார்.

ராமநாதபுரம் மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் பசும் பொன் வந்து செல்லும் வாகன வழித்தடங்களும், தடை செய்யப்பட்டுள்ள வாகன வழித்தடங்கள் குறித்தும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும். இந்த வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் நோக்கி வரக்கூடாது.

சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளுர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் திருச்சி, மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும். மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

தூத்துக்குடி, திருநெ ல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டப சாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும் அல்லது தூத்துக்குடி, சூரங்குடி, சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டப சாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.