
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து நவம்பர் 4-ம் தேதி வரை வட தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்னாமலை, உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்த சூழலில் இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, “புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாணவர்களின் நலன் கருதி இன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.