
உதகையில் மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அவ்வபோது துறை சார்ந்த அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் கட்டுமான பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்றனர். நீலகிரியில் நேற்று இரவு முழுவதும் பரவலாக மழை பெய்ததன் காரணமாக அந்தப் பகுதி சேரும் சகதியுமாக இருந்ததால் மாற்று வாகனத்தில் அமைச்சர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து தனது இன்னோவா காரில் இருந்து இறங்கி பிக் அப் டிரக்கில் பயணித்து மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் ராமச்சந்திரன். இதையடுத்து தனது காரில் ஏறுவதற்காக மீண்டும் பிக் அப் டிரக் மூலம் அமைச்சர் ராமச்சந்திரன் திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு வளைவில் திரும்பிய போது நிலை தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் சற்று கீழே இறங்கியது.
அப்போது ஓட்டுநர் சாதுர்யமாக பிரேக் பிடித்து நிறுத்திய காரணத்தால் வாகனம் மேற்கொண்டு பள்ளத்தில் இறங்காமல் நின்றது. பின்னர் சற்று நேரத்திற்குப் பிறகு வாகனம் பத்திரமாக மேலே ஏற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.