அமர்ந்ததும் அக்னிபத் திட்டம் ரத்து: பிரச்சாரத்தில் பிரியங்கா பேச்சு..!

மத்தியில் காங்கிரஸ் அரசு அமையும் போது, அக்னிபத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று, இமாச்சலப் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபைக்கு வரும் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு, பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பேரணியில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது; “பாஜக தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். போலீஸ் ஆட்சேர்ப்பு மோசடிகள், பிபிஇ கிட் ஊழல், ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் மற்றும் இப்போது போதைப் பொருள்களும் மாநிலத்தில் பரவியுள்ளன. இவை பாஜக ஆட்சியில் நடக்கும் மோசடிகள். பாஜக ஆட்சியில் தொழிலதிபர்களுக்கு எல்லாம் நடக்கலாம், உங்களுக்காக எதுவும் இல்லை. இப்படிப்பட்ட அரசு வேண்டுமா..?. நாங்கள் என்ன வாக்குறுதி அளித்தோமோ, அதை நிறைவேற்றுவோம். சத்தீஸ்கரில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வதாக உறுதியளித்தோம்; காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் மூன்று மணி நேரத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று சத்தீஸ்கரில் குறைந்த வேலையின்மை விகிதம் உள்ளது.

இமாச்சலில் ராணுவத்துக்கு 4 ஆயிரம் வீரர்கள் செல்வது வழக்கம். இப்போது அக்னிபத் திட்டத்தின் கீழ் 400 முதல் 500 இளைஞர்கள் மட்டுமே ராணுவத்தில் சேர முடியும். அவர்களில் 75 சதவீதம் பேர் கூட 4 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். மத்தியில் எங்கள் அரசு அமையும் போது அக்னிபத் திட்டத்தை ரத்து செய்வோம்.

பாஜக இமாச்சலத்தை கடனில் மூழ்கடித்துள்ளது. மாநிலத்திற்கு ரூ.70 ஆயிரம் கோடி கடன் உள்ளது. ஊழியர்களுக்கு ஓய்வூதிய பதற்றம் உள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். இமாச்சலப் பிரதேசத்திற்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். காலியாக உள்ள 63 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். ஹர்கர் லக்ஷ்மி யோஜனா திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும். போதைப்பொருளுக்கு எதிராக போராடுவோம்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.