குஜராத் சட்டப்பேரவையின் தேர்தல் நேற்று நண்பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டார்..டிசம்பர் 1, 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தை ஆட்சி செய்துவரும் பாஜக, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் ஆகியவைக்கு ஈடாக ஆம் ஆத்மி கட்சியும் கடந்த ஓராண்டாக அங்கு களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், முதல் ஆளாக முதல்வர் வேட்பாளரை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முகமாக பார்க்கப்பட்ட இசுதான் கத்வி தற்போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று குஜராத்தில் அறிவித்தார்.