தலைகீழாகத்தான் நிற்பேன்: திருமண போட்டோ ஷூட் அலப்பறைகள்!

பழைய நினைவுகளை நினைவூட்டும் பொக்கிஷமாக புகைப்படங்கள் இருந்தன. பிரிண்ட் போட்டு ஆல்பமாக வீட்டு அலமாரியில் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பார்த்து மகிழ்வது வழக்கம். ஆனால், நிலை மாறி, இன்றைய நவீன உலகில், போகிற போக்கில் செல்பி எடுத்து விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. புகைப்பட உலகில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறிப்பாக திருமண போட்டோக்களில் அதிகம் எதிரொலித்து வருகிறது.

1970களுக்கு முன்பெல்லாம் திருமண வீடுகளில் போட்டோ எடுக்கும் நிகழ்வு அரிதாகவே இருந்தது. 1990களுக்கு பின்னர், திருமண வீடுகளில் புகைப்படம் எடுப்பது வழக்கமான ஒன்றாக மாறி விட்டது. சொந்தபந்தங்கள், நண்பர்கள் மணமக்களுடன் புகைப்படம் எடுப்பர். மணமகன், மணப்பெண் ஆகியோரை இயற்கை காட்சிகள், அருவிகளுக்கு அருகே நிற்க வைப்பது போன்று புகைப்படங்கள் எடிட் செய்யப்படும். ஆனால், தற்போதோ நிலைமை வேறு மாதிரி ஆகிவிட்டது.

திருமண நிகழ்வுகளில் போட்டோ ஷூட்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ள நிலையில், திருமண ஜோடிகள் வித்தியாசமாக போட்டோ ஷூட் எடுப்பது தற்போது சாதாரண விஷயமாகிவிட்டது. புதுமண தம்பதிகள் இருவரும் திருமணத்துக்கு முந்தைய, பிந்தைய போட்டோ ஷூட்கள் எடுப்பது, அதிலும் தீம் என்ற பெயரில் ஏதாவது ஒரு கதையை சொல்லும்படியாக அமைந்திருக்கும் புகைப்படங்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. இதனால், சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

சுடுகாட்டில் போட்டோ ஷூட் எடுப்பது, பாறைகளின் மீது போட்டோ எடுப்பது, தண்ணிக்குள் போட்டோ எடுப்பது, மரத்தில் தொங்கியவாறு போட்டோ எடுப்பது என இந்த அலப்பறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில், மணமகன் தலைகீழாக நிற்பது போன்றும், மணப்பெண் அவரது அருகில் நடனமாடுவது போன்றும் கோயில் ஒன்றில் எடுக்கப்பட்ட திருமண போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. இதனை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிரும் நெட்டிசன்கள், ‘இதுக்குத்தான் கல்யாணம் பண்ணாதீங்கன்னு சொன்னா கேட்டா தானே’ என்று கிண்டலடித்து வருகின்றனர். ஆனால், இந்த போட்டோ எங்கு எடுக்கப்பட்டது என்பன உள்ளிட்ட தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.