கர்நாடக மாநிலம் துமகூரு டவுன் பாரதிநகர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (30). தமிழ்நாட்டை சேர்ந்த இவர் தனது 7 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது கணவர் நோய்வாய்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதனால் அக்கம் பக்கத்தினர் கஸ்தூரியை மீட்டு துமகூரு டவுனில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரான உஷா, கஸ்தூரியிடம் தாய் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை கேட்டு உள்ளார். ஆனால் கஸ்தூரியிடம் அந்த 2 அட்டைகளும் இல்லை என்று தெரிகிறது. இதனால் பிரசவ வலியில் கஸ்தூரி துடித்த போதிலும் மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர் உஷா மறுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படியும் உஷா கூறியதாக தெரிகிறது.
ஆனால் கஸ்தூரியை அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை கஸ்தூரிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, அங்கு கண்ட காட்சியை பார்த்து அவர்கள் அதிர்ந்து போயினர்.
அங்கு கஸ்தூரியும், இரட்டை ஆண் சிசுக்களும் பிணமாக கிடந்தனர். அதாவது, ஒரு சிசு முழுமையாக வெளி வந்த நிலையிலும், மற்றொரு சிசு பாதி வெளியே வந்த நிலையிலும் இருந்தது. அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு கஸ்தூரி பிணமாக கிடந்தார். மேலும் இரட்டை ஆண் சிசுக்களும் உயிரிழந்து இருந்தன. இதனை பார்த்து அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். கஸ்தூரி கிடந்த காட்சி, கல்நெஞ்சையும் உருக்குவதாகவும், கோரமாகவும் இருந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துமகூரு டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவ அதிகாரிகளும் விரைந்து சென்றனர். இதுகுறித்து அறிந்ததும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி மஞ்சுநாத்தும், கஸ்தூரியின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது ஆதார் அட்டை இல்லாததால் கஸ்தூரியை, மருத்துவர் உஷா மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததும் தெரியவந்தது. மேலும் 3 உயிர்கள் பலியாக காரணமாக இருந்த மருத்துவர் உஷா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மஞ்சுநாத்திடம், கஸ்தூரியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் மஞ்சுநாத் நிருபர்களிடம் கூறியதாவது, துமகூருவில் தாய், இரட்டை சிசுக்கள் இறந்த சம்பவம் பற்றி எனது கவனத்திற்கு வந்து உள்ளது. ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் மருத்துவர் உஷா, கஸ்தூரியை மருத்துவமனையில் அனுமதிக்காதது தெரியவந்து உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், பணி இடமாற்றம் செய்யவும் துமகூரு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வேன் என்றார்.
மேலும், கஸ்தூரியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், அக்கம் பக்கத்தினர் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இந்த விபரீதம் நடந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும், இரட்டை சிசுக்களுடன், கஸ்தூரி உயிரிழந்தது மர்மமாக உள்ளது. இந்த சம்பவம் துமகூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.