கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாதேவ்பூர் பகுதியில் உள்ள ஒயிட் ஃபீல்டு – ஹோஸ்கோட் சாலை வழியாக கடந்த 2-ம் தேதி 19 வயதான மாணவி நூர் பிஜா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த கிரேன் வாகனம் ஒன்று மாணவி மீது வேகமாக மோதியது.
இதனால் நிலைகுலைந்த அந்த மாணவி கண் இமைக்கும் நேரத்தில் கீழே விழுந்தார். அந்த நேரத்தில் மோதிய கிரேனின் இடது பக்கமிருந்த முன்பக்க டயரானது மாணவியின் மீது ஏறி இறங்கியது. இந்த சிசிடிவி காட்சிகளின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விபத்தில் ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஒயிட்பீல்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
மாணவியின் தந்தை ரெஹ்மான் கான், கிரேன் உரிமையாளர் பெரியசாமி மீது ஒயிட்பீல்டு போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதற்கட்டமாக விபத்தை ஏற்படுத்திய கிரேன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, கிரேன் ஓட்டுநர் மற்றும் கிரேன் உரிமையாளர் பெரியசாமி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதி வசிக்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்து நடந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள சாலையில் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்று ஆக்ரமிப்பு செய்து கட்டிடம் கட்டியுள்ளதாகவும், அதனால் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தில் விபத்துக்கள் பதிவாகி பலர் இறந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்தது வேகத்தடையும் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளதால் விபத்துகளுக்கு கூடுதல் காரணமாக உள்ளதாகவும், உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.