மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய், மாணிக்பூர் பகுதியை சேர்ந்த விகாஷ் என்பவரின் மகள் ஷ்ரத்தா (26). இவர், மும்பை மலாடு பகுதியில் உள்ள கால்சென்டரில் வேலை செய்தபோது, அப்தாப் அமீன் பூனாவாலா (28) என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஷ்ரத்தா, பெற்றோரை பிரிந்து வசாய் பகுதியில் காதலனுடன் தனியாக வசித்து வந்துள்ளனர். பின்னர் டெல்லி சென்று குடியேறியுள்ளனர். திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வந்த நிலையில் ஷ்ரத்தா காதலனால் கொலை செய்யப்பட்டு உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்டதோடு, உடல் பாகங்களை குளிர்சாதன பெட்டியில் 18 நாட்கள் வைத்திருந்து காட்டில் வீசிய கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அப்தாப்பும் பெண்ணின் இருப்பிடமான வசாய் பகுதியை சேர்ந்தவர் தான். ஷ்ரத்தாவுடன் டெல்லி சென்ற பிறகு அப்தாப் வேறு பெண்களுடன் சமூக வலைதளம் மூலம் பழகி வந்துள்ளார். இது ஷ்ரத்தாவுக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். இது தொடர்பாக கடந்த மே மாதம் 18-ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஷ்ரத்தாவை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். உடல் பாகங்களை வைப்பதற்காக ஆன்லைனின் ஆர்டர் செய்து பிரிட்ஜ் வாங்கியுள்ளார். பிரிட்ஜில் அடைத்து வைத்த உடல் பாகங்களில் சிலவற்றை நள்ளிரவில் எடுத்து சென்று நாய்களுக்கு போட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே அப்தாப் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “எனது காதலியை எளிதாக கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன். ஆனால் அவளது உடலை அகற்ற சிரமப்பட்டேன். இதனால் உடலை துண்டு, துண்டாக வெட்டினேன். மேலும் உடலை மறைத்து வைக்க ‘டபுள் டோர்’ குளிர்சாதன பெட்டியை வாங்கினேன்.
உடல் பாகங்களை வெட்டி அகற்றுவது, ரத்த கறையை சுத்தம் செய்வது பற்றி இணையதளத்தை பார்த்து தெரிந்து கொண்டேன். எனக்கு பிடித்த ‘டெக்டர்’ என்ற டி.வி. நிகழ்ச்சி இந்த திட்டத்துக்கு உதவியது. மேலும், நான் பயிற்சி பெற்ற சமையல்காரன் என்பதால் காதலியின் உடலை துண்டு, துண்டாக வெட்ட முடிந்தது. வீட்டில் துர்நாற்றம் வீசாமல் தடுக்க ரூம் பிரஷ்னர், ஊதுபத்திகளை பயன்படுத்தினேன்.
சில நேரங்களில் நான் செய்த செயலை நினைத்து பயந்து அழுதேன். கைது நடவடிக்கைக்கு பயந்து உடலை சிறிது, சிறிதாக 16 நாட்களாக அகற்றினேன். அதிகாலை 2 மணிக்கு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதிக்கு சென்று பாதாள சாக்கடை, வனப்பகுதி போன்ற இடங்களில் வீசினேன்” என்று அவர் கூறினார்.
இதனிடையே, ஷ்ரத்தா மாயமாகிவிட்டதாக புகார் கிடைத்ததும் போலீசார், அப்தாப் அமீனிடம் விசாரணை நடத்தினர். அதில், தனது போனுடன் ஷ்ரத்தா வெளியில் சென்று விட்டதாக கூறியிருக்கிறார். ஆனால், ஷ்ரத்தா வங்கிக் கணக்கில் இருந்து அப்தாப் வங்கிக் கணக்கிற்கு ரூ.54 ஆயிரம் பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
அதேபோல், செல்போனும் அப்தாப் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. ஷர்த்தாவின் இன்ஸ்டாகிரம் கணக்கையும் மே 31-ம் தேதி வரை அப்தாப் பயன்படுத்தியதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து அப்தாப்பிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அப்தாப் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.