பயிர் காப்பீடு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் : முதலமைச்சர்!!

பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், வடகிழக்குப் பருவமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 15, 2022 முதல் தொடங்கிய சிறப்புப் (சம்பா / தாளடி / பிசானம்) பருவத்தில், விவசாயிகள் பயிர்க்காப்பீட்டிற்கான பதிவை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளினால் தொடர்ச்சியான விடுமுறைகள் காரணமாக, பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பல விவசாயிகள் பெற முடியாததால், பயிர்க் காப்பீட்டிற்கான பதிவை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து இடைவிடாத மழை பெய்து வருவதாலும், வடகிழக்குப் பருவமழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்தடை ஆகிய காரணங்களையும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே பயிர்க் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட 15.11.2022 என்ற காலவரம்பை, 30.11.2022 வரை நீட்டிக்குமாறு மேற்படி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்குறிப்பிட்டுள்ள காரணங்களால், தஞ்சாவூர் (I & II), நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் (I & II), கடலூர், புதுக்கோட்டை (I & II), மதுரை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராமநாதபுரம் (I & II), தேனி, திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, தருமபுரி, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய 27 மாவட்டங்களில் பயிரிடப்படும் இரண்டாம் போக நெல் (சம்பா / தாளடி / பிசானம்) சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை 30.11.2022 வரை நீட்டிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதாகத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.