108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பள பாக்கியை 3 நாட்களில் வழங்க வேண்டும் என்று ஜி.வி.கே. நிறுவனத்திற்கு கர்நாடக அரசு கெடு விதித்துள்ளது.
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை சார்பில் 108 அவசர ஆம்புலன்சுகள் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக சேவையை அளித்து வருகின்றன. கர்நாடக அரசு இந்த ஆம்புலன்சுகளை இயக்கும் பணியை ஜி.வி.கே. என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
அந்த நிறுவனம், சரியான முறையில் ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கவில்லை என்றும், சுகாதாரத்துறையின் விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. மேலும், அந்த ஆம்புலன்சுகளில் பணியாற்றும் நர்சுகள், டிரைவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் பாக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 15 நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்திய சுகாதாரத்துறை, ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் வழங்க வேண்டும் என்றும், சம்பளத்தை பாக்கி வைக்கக் கூடாது என்றும், ஊழியர்களுக்கு 3 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்றும் ஜி.வி.கே. நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
ஆனாலும், அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்கவில்லை. மூன்று மாத சம்பள பாக்கியில் ஒரு மாத சம்பளத்தை மட்டும் வழங்கிவிட்டு 2 மாத சம்பளத்தை வழங்காமல் மீண்டும் பாக்கி வைத்துள்ளது. மேலும், அந்த ஊழியர்களுக்கு சம்பளத்தையும் உயர்த்தவில்லை.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள சுகாதாரத்துறை கமிஷனர் ரன்தீப், “108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை அடுத்த 3 நாட்களில் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஜி.வி.கே. நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும். 14-ம் தேதிக்குள் சம்பள பாக்கியை வழங்குவதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது.
ஆனால், அதன்படி சம்பள பாக்கியை வழங்கவில்லை. அதனால் அந்த நிறுவனத்திற்கு எதிராக அரசுக்கு அறிக்கை அளிப்பேன். அந்த நிறுவனத்திற்கு நாங்கள் திருப்தி சான்றிதழை வழங்க மாட்டோம். அதனால் 3 நாட்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காவிட்டால் ஜி.வி.கே. நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.