தமிழகத்தில், அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக் கூடாது. அவ்வாறு அனுமதி இல்லாமல் சிலை வைத்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வைப்பதற்கு அரசு உரிய அனுமதி வழங்க உத்தரவிட் வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி, அரசின் அனுமதி இல்லாமல் சிலை வைக்கக்கூடாது. எனவே, தற்போது வைக்கப்பட்டுள்ள சிலையை அகற்றி பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். அரசு அனுமதி பெற்ற பின்பு இந்த சிலையை வைக்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பாலசுப்பிரமணியன் மேல்முறையீடு செய்திருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து முறையான அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி, இந்த சிலை என்பது பட்டா இடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், அரசின் முறையான அனுமதி பெறவில்லை. அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது. எனவே அனுமதிக்கக் கூடாது என வாதிட்டனர்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழகத்தில் எந்த இடமாக இருந்தாலும் அரசின் முறையான அனுமதி பெற்ற பின்பு தான் சிலை வைக்கப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி இல்லாமல் சிலை வைத்தால் உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அனுமதி இல்லாமல் வைக்கப்படும் சிலைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் காவல்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
குறிப்பாக, திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வருடைய சிலை வைப்பதற்கே அரசு முறையாக அனுமதி பெற்ற பின்பு தான் வைக்கப்பட்டது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அனுமதி இல்லாமல் சிலை வைக்கக்கூடாது. எனவே, இம்மானுவேல் சேகரனின் சிலை வைப்பதற்கு மனுதாரர்கள் அரசை அணுக வேண்டும். அதனடிப்படையில் அரசு உரிய உத்தரவை பிறப்பிக்கலாம் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.