
காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. கிட்டத்தட்ட சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளித்து வருகிறது.
இந்த நிலையில், மறுசீரமைப்பு பணிகள் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நாளை ஒருநாள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் லலிதா அறிவித்துள்ளார். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.