சென்னை பல்கலைக்கழக 3-வது செமஸ்டர் தேர்வுக்கான கேள்வித்தாளில் குளறுபடி நடந்துள்ளதால், குறிப்பிட்ட செமஸ்டர் தேர்வு மட்டும் ரத்து செய்யப்பட்டு பின்னர் நடத்தப்படும் என சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கெளரி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இளங்கலை மாணவர்களுக்கான 3-வது செமஸ்டர் தமிழ் தேர்வு இன்று காலை நடைபெற இருந்த நிலையில், மாணவர்கள் அனைவரும் தேர்வு அறைக்குச் சென்ற பின்னர் அவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. அது, 4-வது செமஸ்டர் தமிழ் தேர்வுக்கான வினாத்தாள்.
இன்று 3-வது செமஸ்டர் தேர்வெழுதச் சென்ற மாணவர்களுக்கு அடுத்த முறை எழுத வேண்டிய தேர்வுக்கான கேள்வித்தாள் முன்கூட்டியே வழங்கப்பட்டதால் மாணவர்கள் தேர்வெழுத முடியாமல் தவித்தனர். இந்த கேள்வித்தாள் குளறுபடியால் குறிப்பிட்ட செமஸ்டர் தேர்வு மட்டும் ரத்து செய்யப்பட்டு பின்னர் நடத்தப்படும் என சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கெளரி தெரிவித்துள்ளார்.