
இந்தியாவின் அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட ரயிலாக வந்தே பாரத் ரயில் அறியப்படுகிறது. நாடு முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை – மைசூரு செல்லும் வந்தே பாரத் ரயில் போன வாரம் தான் திறப்பு விழா கண்டது. பிரதமர் மோடி கடந்த 12-ஆம் தேதி பெங்களூருவில் வைத்து இந்த வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை தொடங்கியதில் இருந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது.

இதுவரை 3 முறை விபத்துக்கள் ஏற்பட்டு இருக்கின்றன. வந்தே பாரத் ரயிலின் முன் பாகம் பிளாஸ்டிக் ஃபைபரில் தயாரிக்கப்பட்டது. இதனால் எளிதில் சேதம் அடைவதாக சொல்லப்படுகிறது. இன்ஜினுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டாலும் முன்பகுதி சேதம் அடைந்து விடுகின்றன.
இந்நிலையில், மைசூருவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது கன்றுக் குட்டி மோதி விபத்துக்குள்ளானது. அரக்கோணம் அருகே நேரிட்ட இந்த விபத்தில் வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி லேசாக சேதம் அடைந்தது.