மதுரை: தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு சணல் சாக்குப் பைகள் டெண்டர் விடாமல் கோடிக்கணக்காண எண்ணிக்கையில் தேக்கமடைந்துள்ளன. இதனால், ரேஷன் கடை ஊழியர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
தமிழகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 34,790 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் 1,336 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தில் அரிசி, கோதுமை, சர்க்கரை, சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு, பாமாயில் விநியோகம் செய்கிறார்கள். அரிசியும், கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. சர்க்கரை ரூ.25, பருப்பு ரூ.30, பாமாயில் ரூ.25-க்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் 2 கோடியே 23 லட்சத்து 74 ஆயிரத்து 842 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள்.
கடைகளுக்கு மாதந்தோறும் அரிசி, பருப்பு சணல் சாக்குப் பைகளில் வருகிறது. சர்க்கரையும், கோதுமையும் பாலித்தீன் பைகளில் வருகிறது. இதில், சணல் சாக்குப் பைகளை மூன்று மாதத்துக்கு ஒருமுறை தமிழக அரசு சணல் சாக்கு வியாபாரிகளுக்கு இ-டெண்டர் விடுவார்கள். அதனை வியாபாரிகள் கொள்முதல் செய்து விற்பார்கள். கடந்த ஒரு ஆண்டாக ரேஷன் கடைகளில் இந்த சணல் சாக்குப் பைகள் டெண்டர் விடப்படாமல் மலைபோல் தேங்கி கிடக்கின்றன.
மதுரை மாவட்ட ரேஷன் கடைகளில் மட்டும் 25 லட்சம் சணல் சாக்குப் பைகள் தேக்கமடைந்துள்ளன. ஒவ்வொரு கடைகளிலும் இந்த சணல் சாக்கு பைகள் தேக்கமடைந்துள்ளதால் மாதந்தோறும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கு வரும் பொருட்களை இறக்கி வைக்க இடமில்லாமல் ரேஷன் கடை ஊழியர்கள் திண்டாடுகின்றனர். அந்த சணல் சாக்கு பைகளை டெண்டர் வரும் வரை முறையாக பாதுகாக்க வேண்டும், பாதுகாக்காவிட்டால் அதன் மொத்த விலை ரேஷன் கடை ஊழியர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும்.
அதனால், அடுத்தடுத்து பொருட்கள் வரும் சணல் சாக்குப் பைகளை வைக்க இடமும் இல்லாமல், அதனை பாதுகாக்கவும் முடியாமல் சிரமப்படுகிறார்கள். பல முறை, துறை அமைச்சர், அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் தேக்கமடைந்துள்ள கோடிக்கணக்கான எண்ணிக்கையிலான சணல் சாக்குப் பைகளை டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, ”கடந்த காலத்தில் ஒரு சணல் சாக்கு பை ரூ.15-க்கு அரசு விலை நிர்ணயித்து இருந்தது. வெளிசந்தையிலே தற்போது ஒரு சணல் சாக்குப்பை ரூ.15-க்குதான் விற்கிறது. ஆனால், அரசு ஒரு சணல் சாக்கு பை ரூ.19 என விலை நிர்ணயித்து இ-டெண்டர் விடுகிறது. கூடுதல் விலை கொடுத்து சணல் சாக்குப் பைகளை ஏலம் எடுத்து வியாபாரிகளுக்கு லாபம் இல்லை. அதனால், மாதந்தோறும் இ-டெண்டர் விட்டாலும் வியாபாரிகள் யாரும் ரேஷன் கடை சணல் சாக்கு பைகளை எடுக்க முன்வருவதில்லை.
மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மட்டும் கடந்த ஒரு ஆண்டாக 25 லட்சம் சணல் சாக்குப் பைகள் தேக்கமடைந்துள்ளன. தமிழகம் முழுவதும் ஒப்பிடுகையில் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் சாக்குப் பைகள் தேக்கமடைந்துள்ளன. ஆனால், அரசு அவர்கள் நிர்ணயித்த விலையிலே சாக்குப் பைகளை விற்கும் நிலையில் உள்ளனர். அதனால், கடைக்காரர்களாகிய நாங்கள்தான் அந்த சாக்குப் பைகளை பாதுகாக்க முடியாமல் சிரமப்படுகிறோம். கூட்டுறவு மாநில பதிவாளர் சந்தை விலையிலே சாக்குப் பைகளை விற்க முன் வரவேண்டும். பழைய சாக்குப் பைகளை ஏலம் விடாமல் கடைகளை வைத்துள்ளதால் நாங்கள் அருகே ஒரு வீடு, கடை சொந்தமாக வாடகைக்கு எடுத்து அதனை பாதுகாக்க வேண்டிய உள்ளது. இந்தப் பணத்தை எங்களுக்கு யார் தருவார்கள்?
ஏலம் விடாவிட்டால் தேக்கமடைந்துள்ள சாக்குப் பைகளை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும். இதேநிலை நீடித்தால் மக்களுக்கு மாதந்தோறும் விநியோகிக்க வந்து இறக்கும் பொருட்களை வைக்க இடமில்லாமல் அதையும் வைக்க ஒரு கடைக்கு ஒரு குடோனை நாங்கள் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்படும். ரேஷன் கடைகளில் விதிமீறல்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும் அரசு அதிகாரிகள், இந்த விஷயத்தில் அலட்சியமாக உள்ளது நியாயம். ஒரு மாதத்தில் இந்த சாக்குப்பைகளை எடுக்கவோ ஏலம் விடவோ நடவடிக்கை எடுக்காவிட்டால் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.