
திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் திருச்சி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக முதன்மை செயலாளரும், தமிழக அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம். இவர், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றார். ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. போலீசார் அவரை தேடி வந்த நிலையில், கல்லணை ரோடு திருவளர்ச்சோலை பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. முள் கம்பிகளால் கை கால்கள் கட்டப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கை முதலில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் சிபிசிஐடி, சிபிஐ ஆகிய அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இந்த வழக்கை கடந்த 6 மாதங்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 700 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், திருச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ரவுடிகளாக வலம் வந்த 13 பேரை அடையாளம் கண்டு, அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர்கள் மீது சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென, திருச்சி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமஜெயம் கடந்த 2006-ம் ஆண்டு திருச்சி லீக் என்ற பெயரில் பெரிய அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த ஆசைப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக திருச்சி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடமும் பேசி, போட்டியை நடத்த முடிவு செய்துள்ளனர். ஆனால், ராமஜெயத்திற்கு வேண்டிய அணியினரை, திருச்சி கிரிக்கெட் சங்கம் விளையாட அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் போட்டியையே திருச்சி கிரிக்கெட் சங்கம் ரத்து செய்திருக்கிறது.
இந்த விஷயத்தில் ராமஜெயத்திற்கும், கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், கைகலப்பு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. எனவே, இந்த பகையை மனதில் வைத்து யாரேனும் ராமஜெயத்தை கொலை செய்திருப்பார்களா என்ற கோணத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் பல விஷயங்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.