ராமேஸ்வரம் அருகே, இலங்கைக்கு கடத்த முயன்ற 360 கோடி ரூபாய் மதிப்பிலான ‘கோகைன்’ போதைப் பொருளை கடற்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கீழக்கரை நகராட்சி திமுக கவுன்சிலர், முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே, மண்டபம் – வேதாளை சாலையில் நேற்று முன்தினம் இரவு கடற்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக சென்ற சொகுசு காரை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அதில், 20 லிட்டர், 30 கேன்களில், ‘கோகைன்’ போதைப் பொருளுக்கான மூலப்பொருட்கள் 360 கிலோ இருந்தன. இந்த போதைப் பொருளை வேதாளை சாதிக் அலி (36) என்பவரின் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரிந்தது.
அந்த போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்து, காரில் இருந்த சகோதரர்களான, கீழக்கரை நகராட்சி திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன் (45), தற்போதைய 19வது வார்டு திமுக கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ் (42) ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு, 360 கோடி ரூபாய். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மதிப்புள்ள போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்று போலீசார் பறிமுதல் செய்தது இதுவே முதல் முறை.
கைது செய்யப்பட்டுள்ள சகோதரர்களுக்கு சென்னை டூ ராமநாதபுரம் சரக்கு லாரி சர்வீஸ் நிறுவனம் உள்ளது. இவர்களுக்கு, சர்வதேச போதைப் பொருள் கடத்தல், ‘மாபியா’ கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் மத்திய – மாநில உளவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.