
போதைப்பொருள் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் அதில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தான் போலீசார் போதைப்பொருள் விற்பனை, நடமாட்டத்தை தடை செய்யவில்லை என, எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிந்த பணிகளை துவக்கி வைத்தார். இதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, “கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்று விட்டதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது. சிறப்பாக சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்காக ஜனாதிபதியிடம் விருது வாங்கினோம். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை முதல்வர் எண்ணி பார்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு அடியோடு படுபாதாளத்திற்கு சென்று விட்டது.
போதைப்பொருள் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் அதில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தான் போலீசார் போதைப்பொருள் விற்பனை, நடமாட்டத்தை தடை செய்யவில்லை. அவர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர். ராமநாதபுரத்தில் 360 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், திமுகவைச் சேர்ந்த கவுன்சிலருக்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டது மட்டும் இப்படி என்றால், கண்டுபிடிக்க முடியாமல் எவ்வளவு போதைப்பொருள் கடத்தப்பட்டிருக்கிறது. விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்பது முதல்வருக்கு தெரியவில்லை. ஏனென்றால், இவர் பொம்மை முதல்வர், திறமையற்ற முதல்வர். போலீஸ்துறை, உள்துறையை கையில் வைத்திருப்பவர் முதல்வர். ஆனால், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கையை கையாளவில்லை” என்றார்.