மணக்குள விநாயகர் கோவில் யானை மயங்கி விழுந்து மரணம்..! பக்தர்கள் கண்ணீர் விட்டு அஞ்சலி!!

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 1995-ம் ஆண்டில் 5 வயதான லட்சுமி யானை கொண்டுவரப்பட்டது. அன்று முதல் இன்று வரை விநாயகருக்கு சேவை செய்தும், கோயில் முன்பு யானை லட்சுமி நின்றுகொண்டு அங்கும் வரும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்குவது, கோயில் விழாக்களில் வீதி உலாவின்போது முன்னே செல்வது, முக்கிய பூஜைகளில் பங்கேற்பது என லட்சுமியின் பங்கேற்பு முக்கியமாக இருந்தது.

லட்சுமி யானை கம்பீரமாக கோயில் முன்பு அசைந்தாடியபடி நிற்பதால் அதை வெளிநாட்டிலிருந்து வருவோரும் மிகவும் அன்பாக நேசித்து அதனிடம் ஆசீர்வாதம் பெற்று புகைப்படம் எடுப்பதையும் விரும்பினர்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக லட்சுமிக்கு அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. அதனால், வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும் லட்சுமி யானையின் உடல்நலத்தை கண்காணித்து சிகிச்சை அளித்துவந்தனர். யானைப்பாகன்களும் லட்சுமி யானையை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், வழக்கம் போல் இன்று காலை யானையின் இருப்பிடமான ஈஸ்வரன் கோவிலில் இருந்து நடைப்பயிற்சிக்கு பாகன்கள் அழைத்துச் சென்றனர். அப்போது கல்வே கல்லூரி அருகே சாலையில் திடீரென நின்ற யானை பின் தயங்கித் தயங்கி நடந்தது. அதன்பின் தீடீரென கீழே விழுந்து இறந்தது. மருத்துவர்களும், யானை பாகனும் பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லை. யானை இறந்ததைத் தொடர்ந்து மணக்குள விநாயகர் கோவில் நடை சார்த்தப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் யானைக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கோவிலுக்கு எடுத்துச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும், ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் இறந்த யானை லட்சுமிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் கண்ணீர்விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.