டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இந்த நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த மாதம் 27-ம் தேதி எலான் மஸ்க் தன் வசப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் ட்விட்டரில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.
இந்நிலையில், ட்விட்டர் கணக்கு வைத்திருப்பவர்களை ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். தற்போது போலி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டு வருவதால் ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை குறையலாம் என்று தெரிவித்தார்.
மேலும் ட்விட்டரில் பயனர்கள் பதிவிடும் சராசரியாக 280 எழுத்துக்களை அல்லது உள்ளீடுகளை மட்டுமே டைப் செய்து அனுப்ப முடியும் வசதி தற்போது உள்ளது. இந்த நிலையில், அதிகம் கருத்துகளை பயனர்கள் பதிவிட வசதியாக 1,000 எழுத்துக்கள் வரை ஒரே ட்வீட்டில் பதிவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல, ஆப்பிள் பிளே-ஸ்டோரில் இருந்து ட்விட்டர் நீக்கம் செய்யப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.