
மாற்றுத்திறனாளிகள் இல்லத்திலிருந்தே பணி செய்யலாம் என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கப் போவதாக, சென்னையில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (3-ம் தேதி) உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன் பின்னர் அவர் பேசியதாவது; “மாற்றுத்திறனாளிகளை அனைவரும் மதிக்க வேண்டும். அவர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக உருவாக்கிய அந்த பாதை அன்பு பாதை. மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் அடைந்த மகிழ்ச்சியால் நானும் மகிழ்ந்தேன்.
மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வுத் தொகை ஜனவரி 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்குச் சென்று பணி செய்ய வேண்டிய தேவை இல்லை; இல்லத்திலிருந்தே பணி செய்யலாம் என்ற ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்கப் போகிறோம். அதற்குச் சான்றாகத்தான் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி, மென்பொருளுடன் கூடிய திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய புதிய முயற்சியும் இங்கே அரங்கேற்றப்பட்டு உள்ளது” என்று கூறினார்.