கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் சிஎம்எஸ் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் தன்னுடன் படிக்கும் மாணவருடன் இரவு வேளையில் வெளியே சென்றுள்ளார். இருவரின் நண்பரும் அங்கேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை பார்த்து நலம் விசாரித்து பின்னர் இருவரும் உணவு உண்ண சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு காரில் வந்த மூன்று இளைஞர்கள் அந்த கல்லூரி மாணவியை பிடித்து ஆண் நண்பருடன் இந்த நேரத்தில் ஏன் சுற்றுகிறாய் என்று கேட்டு ஈவ் டீசிங்கில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் செயலை உடன் இருந்த மாணவர் தட்டிக் கேட்டபோது அந்த மாணவரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு ஆளான மாணவி கூச்சலிட்ட போது, அக்கம் பக்கத்தில் இருந்த மக்களும், சில கல்லூரி மாணவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதற்குள் அந்த ஈவ் டீசிங் கும்பல் மாணவியையும் மாணவரையும் தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளது.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிஎம்எல் கல்லூரி மாணவிகள் தங்கள் தலை முடியை வெட்டி தங்கள் எதிர்ப்பை காட்டி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு சக மாணவர்களும், ஆசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வீடியோ ஆதாரத்தை வைத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட 3 இளைஞர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையிலும் அடைத்துள்ளனர். மேலும் இவர்கள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.