பிளாட்ஃபாரத்தில் சிக்கிய மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..!

விசாகப்பட்டினத்தில், ரயில் பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்திற்கும் நடுவே சிக்கி, மீட்கப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், அன்னவரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா (20). இவர், விசாகப்பட்டினம் அருகே உள்ள துவ்வாடா எனும் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக, தினமும் தனது ஊரில் இருந்து ரயில் மூலம் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி இவர் வழக்கம்போல் குண்டூர் – ராயகடா எக்ஸ்பிரஸ் ரயிலில் கல்லூரிக்கு பயணம் செய்தார். அப்போது, துவ்வாடா ரயில் நிலையம் வந்தபோது, ரயில் நின்றது. அப்போது சசிகலா ரயிலில் இருந்து இறங்கினார்.

அந்த நேரத்தில் அவருடைய கால் இடறி ரயில் பெட்டிக்கும், பிளாட்ஃபாரத்துக்கும் இடையில் விழுந்தார். இதில், அவருடைய இடுப்புப் பகுதி பிளாட்ஃபாரத்துக்கும், ரயில் பெட்டிக்கும் மத்தியில் சிக்கிக்கொண்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.

சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர், பிளாட்ஃபாரம் இடிக்கப்பட்டு சசிகலா மீட்கப்பட்டார். அதன் பின்னர், விசாகப்பட்டினம் கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அங்கு சிகிச்சை பெற்ரு வந்த சசிகலா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

மாணவி சசிகலாவின் மரணம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “விபத்தில் சிக்கிய மாணவியின் சிறுநீர் பைகள் கடுமையாக சேதமடைந்து, ரத்தம் கசிந்தது. அதனால், உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார்” என்று தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.