கர்நாடக மாநிலம் பெங்களூரு தென்கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இளம்பெண் வசித்து வருகிறார். அந்த இளம்பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபர் சந்தித்து பேசினார். அப்போது இளம்பெண் சம்பந்தப்பட்ட வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதனை வெளியிடாமல் இருக்க தான் சொல்வதை கேட்க வேண்டும், தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் அந்த வாலிபர் கூறியதாக தெரிகிறது.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண், வாலிபர் சொல்வதை கேட்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், இளம்பெண்ணின் செல்போனுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக தென்கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை பொறிவைத்து கைது செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, முதல் முறையாக வாலிபர் அழைத்த போது, இளம்பெண்ணும் சென்றிருந்தார். அன்றைய தினம் இளம்பெண்ணை பார்த்து பேசிவிட்டு வாலிபர் சென்று விட்டார். இதனால் அவரை போலீசாரால் கைது செய்ய முடியாமல் போனது. 2-வது முறையாக ஓட்டல் ஒன்றில் அறை எடுத்துவிட்டு இளம்பெண்ணை வாலிபர் அழைத்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, இளம்பெண்ணும் வாலிபர் கூறிய ஓட்டலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், ஓட்டலில் வைத்து வாலிபரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைதான வாலிபர் புதுச்சேரியை சேர்ந்த நிரஞ்சன் என்பது தெரியவந்துள்ளது. என்ஜினீயர் முடித்துள்ள இவர், பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக தென்கிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆண்களுக்கான தங்கும் விடுதியில் அவர் வசித்து வருகிறார். அந்த தங்கும் விடுதியின் அருகேயே பெண்களுக்கான தங்கும் விடுதியும் இருக்கிறது.
இந்த நிலையில், தனது தங்கும் விடுதியின் மாடியில் இருந்து பக்கத்து மாடிக்கும், பெண்கள் வசிக்கும் தங்கும் விடுதிக்கும் நிரஞ்சன் தாண்டி சென்றுள்ளனர். பின்னர் தங்கும் விடுதியில் இளம்பெண்கள் குளிப்பது மற்றும் ஆடை மாற்றும் வீடியோக்களை தனது செல்போனில் நிரஞ்சன் வீடியோ எடுத்து வைத்து கொள்வார். அந்த வீடியோவில் இருக்கும் இளம்பெண்ணை சந்தித்து ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டுவதை அவர் தொழிலாக வைத்திருந்தார்.
நிரஞ்சன் செல்போனை சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தார்கள். அப்போது அவரது செல்போனில் இளம்பெண்கள் சம்பந்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கைதான நிரஞ்சன் மீது தென்கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.