பெங்களூருவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வரும் 36 வயதுடைய ஒருவர், 34 வயதுடைய தன் மனைவியை தனது நண்பர்களுடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள சம்பிகேஹள்ளியில் வசிக்கும் தம்பதிக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்து. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. கணவர் தனியார் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், கணவன் மீது அவருடைய 34 வயது மனைவி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘என் கணவர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர். அத்துடன், போதைப் பொருளும் உட்கொள்கிறார். இதனால், தினமும் வீட்டில் சண்டை நடந்துவந்தது.
இந்நிலையில் அவர், தன் இரண்டு நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுடன் என்னை உடலுறவு கொள்ள வற்புறுத்துகிறார். போனில் அவர்களுடன் நான் இருப்பது போன்ற வீடியோவை எடுத்து வைத்துக் கொண்டு, இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார்.
விவாகரத்து கேட்கும் போதெல்லாம் அந்த வீடியோவை வெளியிடுவதாகக் கூறி விவாகரத்து தர மறுக்கிறார். இதனால் நான் மிகவும் மன வேதனையில் துடிக்கிறேன். என் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், ‘மனைவியின் சகோதரியை தன்னுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாக ஏற்கெனவே அந்த நபர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. அவரையும், அவருடைய நண்பர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ எனத் தெரிவித்தனர்.