உலகக்கோப்பை கால்பந்து: பிரேசில் தோல்வி…நெய்மர் விலக முடிவு?

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி காலிறுதியுடன் வெளியேறிய நிலையில் சர்வதேச போட்டிக்கு நெய்மார் முழுக்கு போடுவதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில், 5 முறை சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான பிரேசில் அணி நேற்று முன்தினம் கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியாவிடம் தோல்வி அடைந்தது. இதில் கூடுதல் நேரத்தில் 105-வது நிமிடத்தில் நெய்மார் கோல் அடித்த பிறகு, மேற்கொண்டு 15 நிமிடங்கள் தடுப்பாட்டத்தில் கச்சிதமாக ஈடுபட்டு இருந்தால் பிரேசில் அரைஇறுதிக்கு வந்திருக்கலாம்.

ஆனால் பின்கள தற்காப்பில் கோட்டை விட, 117-வது நிமிடத்தில் குரோஷியாவின் புருனோ பெட்கோவிச் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்று சமனுக்கு கொண்டு வந்தார். இதையடுத்து கொண்டு வரப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசில் வீரர்கள் ரோட்ரிகோ, மர்கியூனோஸ் ஆகியோர் வாய்ப்பை வீணடித்ததால், குரோஷியா 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது.

பெனால்டி ஷூட்-அவுட்டில் 5-வது வாய்ப்பில் பந்தை அடிக்க நெய்மார் காத்திருந்தார். ஆனால் அது அவசியமில்லாமல் போய் விட்டது. தொடக்கத்தில் பிரேசிலின் பல ஷாட்டுகளில் இருந்து அணியை காப்பாற்றிய குரோஷியாவின் கோல் கீப்பர் லிவாகோவிச் ஷூட்-அவுட்டிலும் பிரமாதமாக செயல்பட்டு ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

அத்துடன் உலகக் கோப்பையில் பெனால்டி ஷூட்-அவுட்டில் தோற்றதில்லை என்ற பெருமையையும் குரோஷியா தக்க வைத்துக் கொண்டது. கடந்த 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்த பிரேசில் அதன் பிறகு ஒவ்வொரு ‘நாக்-அவுட்’ சுற்றிலும் ஐரோப்பிய அணிகளிடமே சறுக்கியிருக்கிறது. அந்த வகையில் இந்த முறை குரோஷியாவிடம் மண்ணை கவ்வியிருக்கிறது.

தோல்வியின் வேதனை தாங்க முடியாமல் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் மைதானத்திலேயே உட்கார்ந்து கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுதார். அவரை சக வீரர்கள் தேற்றினர். தோல்வியை தழுவினாலும் பிரேசில் வீரர்களில் அதிக கோல் அடித்தவரான ஜாம்பவான் பீலேவின் சாதனையை (77 கோல்) சமன் செய்தது மட்டுமே நெய்மாருக்கு கிடைத்த ஒரே ஆறுதலாகும்.

இதுவே நெய்மாரின் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் பிரேசிலுக்கு இனி புதிய பயிற்சியாளர் வர உள்ளதால் அவருடனான உறவு எப்படி அமையுமோ என்பதில் நெய்மாருக்கு தயக்கம் உள்ளது.

தேசிய அணியில் மீண்டும் விளையாடுவதற்கான கதவை நான் முழுமையாக சாத்தி விடவில்லை என்று நெய்மர் கூறியுள்ளார். ஆனால் மீண்டும் பிரேசிலுக்காக விளையாடுவேனா என்று 100 சதவீதம் உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அணிக்கும், எனக்கும் எது நல்லது என்பது பற்றி நான் கொஞ்சம் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டி உள்ளது என்று நெய்மர் சூசகமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

3-வது முறையாக உலகக் கோப்பையில் கால்பதித்த நெய்மாருக்கு இந்த தடவையும் சோகமே மிஞ்சியிருக்கிறது. இதற்கிடையே, பிரேசில் அணியின் தலைமை பயிற்சியாளராக 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றிய டைட் விலகுவதாக அறிவித்துள்ளார். இது வலியான ஒரு தோல்வி என்று குறிப்பிட்டுள்ள அவர், உண்மையிலேயே மிகவும் கடினமாக இருக்கிறது என்றார். ஏற்கனவே சொன்னது போல் இத்துடன் பிரேசில் அணியுடனான எனது பயிற்சியாளர் பணி முடிவடைந்ததாகவும், அமைதியாக வெளியேறுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.